Wednesday, September 2, 2026

அந்தக் கடைசி நொடி

 


வினு சக்கரவர்த்தி போன்ற ஆஜானுபாவமான
 உடற்கட்டும்பெரிய மீசையும் கிரீடமும்
கையில் கதாயுதமும் கொண்டு
மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும்
 உள்ளேவந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று
இவர் "எமதர்மன்தான் " என்று

ஆமை புகுந்த வீடு அமீனா புகுந்த வீடு
எமன் புகுந்தவீடும்உருப்பட்டதாக சரித்திரம் இல்லை
.இருந்தாலும் மரியாதை நிமித்தமாக
"வாருங்கள் வாருங்கள்
நான் ரெடி போவோமா ?"என்றேன்

எமர் (ன் )என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

"எத்தனை யுகங்களோ எவர் எவர் உயிரையோ
எடுத்திருக்கிறேன்இதுவரை யாரும் உன்போல
 நான் ரெடி போவோமா எனச் சொன்னதில்லை
உனக்கு சாவென்றால் பிடித்தமா இல்லை
வாழ்வு வெறுத்துப் போயிற்றா "

"இல்லை இல்லை நீங்களும் மூன்று தபால்
 போட்டுவிட்டீர்கள்நான் தான் பதில் போடமுடியவில்லை.
ஆனாலும் மனத்தளவில் ரெடியாகிவிட்டேன்
அதுதான் தங்கள் வரவு அதிர்ச்சி அளிக்கவில்லை "என்றேன்

"நீர் எழுத்தாளர் எனத் தெரியும் அதுதான்
பொடிவைத்துப் பேசுகிறீர்நான் கோடிவீட்டுக்
 குப்புசாமியைத்தான் கொண்டுபோக வந்திருக்கிறேன்
உம்மைக் கொண்டுபோக இல்லை
என்வே பதற்றப் படாமல் அமரும்
உன்னிடம் எமக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும்
ஒளிக்காமலும் பயப்படாமலும் பதில் சொல்லும் " என்றார்

நான் சாகப் போவதில்லை எனத் தெரிந்ததும்
எப்படித்தான்தைரியம் வந்தது எனத் தெரியவில்லை
சோஃபாவில் நன்றாக
சொகுசாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.
வெட்டாத கத்திக்கும்உயிரெடுக்காத எமனுக்கும்
 எதற்குப் பயப் படவேணும்

பின் எமரே தொடர்ந்தார் "இந்திரலோகத்தில்
எல்லோரும்என்னைஏகமாகப் பேசுகிறார்கள்.
சாவின் கடைசி நிமிடங்களில் யாரையும்பேசவிடாது
 அவர்களைக் கொன்றுவிடுகிறேனாம்
.இதனால் அவர்கள் வாழ்ந்த வாழ்வில்
அறிந்து கொண்டதைபுரிந்து கொண்டதை
சொல்ல முடியாமலே போகிறதாம்
அதனால்தான் பூமியில்பஞ்சமா பாதகங்கள்
பெருத்துப் போனதாகச் சொல்லுகிறார்கள்
எனக்கு அது உடன் பாடில்லை
நீ என்ன சொல்கிறாய் "என்றார்

"அவர்கள் சொல்வதுபோல் கொஞ்சம்
பரீட்சித்துப் பார்க்கலாமே " என்றேன்

"அதைச் செய்யாமல் உன்னிடம் வருவேனா.
ஒருவனிடம் கனவில் தோன்றிஅடுத்தவாரம்
 உன் உயிர் எடுக்கப் போகிறேன் எனச் சொன்னேன்
அதுவரை யோக்கியனாக இருந்தவன்
அந்த ஒருவாரத்தில் ஆடித் தீர்த்துவிட்டான்
முப்பது வருடம் செய்யாத பாவங்களை
ஒரு வாரத்தில் முடித்துவிட்டான்
சரி. அடுத்தவனிடம் சொல்லிப் பார்த்தேன்.
அவன் அந்த ஒரு வாரமும்
செத்த பிணமாகத்தான் உலவிக் கொண்டிருந்தான்.
சரி அதுதான் போகட்டும் என
கடைசி நிமிடங்களில் ஒருவனுக்கு தகவல் சொல்லி
அரை மணி நேரம்கெடு கொடுத்தும் பார்த்தேன்
முழு நேரத்தையும் 'பினாத்தியே "தீர்த்துவிட்டான்
இதுவரை எவனுக்கும் தான் வாழ்வில்
 புரிந்து கொண்டதை அடுத்தவருக்குச்
சொல்லிச் செல்லவேண்டும் என்கிற எண்ணம்
 சுத்தமாக இல்லை " என்றான்

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை

"அதுதான் இப்போது அடுத்த முயற்சியாக
 உன்னிடம் வந்துள்ளேன்உன்னை இப்போது
 கொண்டு போகப் போவதில்லை
உன்னை கொண்டுபோகப் போகும் நாளையும்
 சொல்லப் போவதில்லை
என்வே பயப்படாமல் சொல்லு . நீ இப்போது
சாகப் போகிற நொடியாக இருந்தால்
வாழ்வை அர்த்தப் படுத்துவதாக ஒரு செய்தி
சொல்லும்படியாகச் சொல்
எனச் சொன்னால் என்ன சொல்லுவாய் " என்றான்

இது நான் வாழ்க்கையில் சந்தித்த கேள்விகளிலேயே
கடினமான கேள்வியாகவும்
புதிரான கேள்வியாகவும் பட்டது.
சிறுவயது முதல் இன்றுவரை நடந்த அனைத்து
 நிகழ்வுகளையும் ஒவ்வொன்றாக
அசைபோட்டுப் பார்த்தேன்
நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க
பள்ளியில் மெனக்கெட்டது
வேலைக்கான தயாரிப்புக் கூடமாக
கல்லூரியை க் கருதியது
நல்ல இல்லறம் அமையவே
வே லை எனக் கொண்டது
குழந்தைகளின் எதிர்காலம் கருதியே
பகலிரவாய் உழைத்தது ....
யோசிக்க யோசிக்க மர்மம் விலகுவது போலப் பட்டது
இத்தனை ஆண்டு காலம் உயிரோடுதான்
இருந்திருக்கிறேனே ஒழிய
அந்த அந்த காலங்களில் வாழவே இல்லை
என்கிற உண்மை புரிய வெட்கிப் போனேன்

" ஞாழிகை ஆகிறது ஏதும் உன்னால்
 சொல்ல முடியுமா ' என்றான்

" முடியும் ஒரு வாக்கியமாகச் சொல்லவா
 விவரித்துச் சொல்லவா " என்றேன்

"விவரித்தல் வேண்டியதில்லை
 நான் புரிந்து கொள்வேன் இரத்தினச் சுருக்கமாய் சொல் "

"நேற்றும் இல்லை நாளையும் இல்லை
அந்த அந்த நொடியில்
வாழுதலே வாழ்க்கை " என்றேன்

எமன் முகத்தில் பரவசம் படரத்துவங்கியது

"சபாஷ் சபாஷ் "எனக் கூச்சலிட்டபடி என் முதுகில்
 ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு
மறைந்து போனான் நான் நடு நடுங்கிப் போனேன்

வலி பொறுக்காது நான் லேசாக உடல் அசைக்க
 உடல் பாரமாகத் தெரிந்தது
கண்களை கஷ்டப்பட்டு திறக்க என்னைச் சுற்றி
ஒரு பெரும் கூட்டமே நின்று கொண்டிருந்தது

"அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்
இனி பயமில்லை ..  இன்னும் என்ன என்னவோ
சொல்லிக் கொண்டிருந்தார் குடும்ப டாக்டர்

Wednesday, December 23, 2015

நம்பிக்கை

.சிறுவயதில் ஏதோ ஒரு உபன்யாசத்தில் கேட்ட கதை
கேட்ட இடம் வயது சொன்னவர் என எதுவுமே
சுத்தமாகஎன் நினைவினில் இல்லை.
ஆயினும் கதை மட்டும் எப்படியோ
என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது
அதுவும் என்னை விடவில்லை
எனக்கும் அதை விட இஷ்டமில்லை
இன்றும் கடலுக்கடியில் பழைய இலங்கை
இருப்பதாகவும்அதை விபீஷணன்
ஆண்டு கொண்டிருப்பதாகவும் வருஷத்தில்
ஒரு குறிப்பிட்ட நாளில் ந்ள்ளிரவில் அரக்கர்கள்
 புடை சூழஇராமேஸ்வரம் வந்து ராமர் பாதம்
 தரிசித்துப்போவதாகவும்அந்த உபன்யாஸ்கர் மிக
அழகாக விளக்கினார்

அப்படி ஒரு சமயம் அவர்கள் ராமேஸ்வரம் வந்து
திரும்பிக் கொண்டிருக்கையில்அதை பார்த்துக்
கொண்டிருந்தகிராமவாசி ஒருவன் எங்குதான்
போகிறார்கள்எனப் பார்த்துவிடுவோம் என்கிற
ஆர்வ மிகுதியால்அரக்கர்கள் சுமந்து வந்த பெரிய
பூக் கூடைக்குள்ஏறி ஒளிந்து கொள்கிறான்
என்ன நடக்கிறது எங்கு போகிறார்கள்
எப்படிப் போகிறார்கள் என்பது எதுவும்
அவனுக்குத் தெரியவில்லை.இரவெல்லாம்
கடலோசை மட்டும்கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அப்படியே அசந்து தூங்கியும் போகிறான்

விடிந்து கூடைக்குள் இருந்து வெளியேறிப்
பார்த்தால் மிகப் பெரியதங்கத்தாலேயான ஆன
அரண்மனைக்குள் அவன் இருப்பது தெரிகிறது
அதன் பிரமாண்டம் அதன் வசீகரம் இவற்றில் மயங்கி
 வாய்பிளந்து
நின்று கொண்டிருந்தவனை காவல் புரிந்து
கொண்டிருந்த அரக்கர்கள்பார்த்துவிடுகிறார்கள்.
நரன் இங்கு வர சந்தர்ப்பம் இல்லையே
எப்படி வந்தான் எனத் தீவீரமாக விசாரிக்க
அவன் நடந்ததையெல்லாம்விரிவாகச் சொல்லி
அழ அவனை நேராக விபீஷன
மகாராஜாவிடம்கொண்டுபோய் சேர்க்கிறார்கள்

அவன் வந்த முழு விவரத்தையும் கேட்டறிந்த
விபீஷண மகராஜா"சரி ஏதோ ஆர்வ மிகுதியால்
இந்த மனிதன் எப்படியோ நம் நகருக்கு
வந்து விட்டான்.நம் நாடு வந்தவன் நமக்கு
விருந்தாளி போலத்தான்அவனுக்கு நம் நாடு
முழுவதையும் சுற்றிக் காண்பியுங்கள்
ஒருவாரம் முடிந்து அவனை நாமே
அனுப்பிவைக்கலாம் "என்றார்

ஒருவாரம் அவனுக்கு ராஜாங்க விருந்து
 உபச்சாரம் தடபுடலாக நடந்தது
அரண்மனை ,அசோக வனம் என என்ன என்ன
 பார்க்க முடியுமோஅதையெல்லாம்அவன் ஆசை
 தீரும் மட்டும் சுற்றிக் காட்டினார்கள்.
தொட்டிக்குள் மீனை நாம்வெளியில் இருந்து
பார்ப்பதுபோல் இவர்கள் வெட்டவெளியில் இருக்க
இவர்களைச் சுற்றி கடலிருப்பதைப் பார்க்க
மலைத்துப் போனான்என்ன புண்ணியம் செய்தோம்
எனத் தெரியவில்லையே எனஎண்ணி எண்ணி
மிகவும் குதூகலம் கொண்டான்அந்த கிராமவாசி.
இப்படியே ஒருவாரம் மிக மகிழ்ச்சியுடம் முடிந்ததும்
அரக்கர்கள் மீண்டும் அடுத்த உத்தரவுக்காக
மகராஜாவிடம் கொண்டு நிறுத்தினார்கள்

"மகிழ்ச்சியா " என விசாரித்த விபீஷண மகாராஜா
முதுகில்சுமக்கும் அளவுபொன்னும்
பொருளும் கொடுத்துஅரண்மனை வாயில் வரை
வந்து "சென்று வா " எனஅனுப்பிவைத்தான்.
அதுவரை மகிழ்ச்சியில்திக்கு முக்காடிக்கொண்டிருந்த
கிராமத்தானுக்கு மேலேகடல் இருப்பதும்
தான் கடலுக்கு அடியில் இருப்பதுவும்
அப்போதுதான் லேசாகப் புரியத் துவங்கியது

" மகாராஜா மன்னிக்க வேண்டும் தங்களுக்கு
தெரியாது இல்லைநான் சாதாரண மானிடன்.
இந்தப் பெரும் கடலை எப்படிக் கடந்து
கரை சேர இயலும் யாரையாவது துணைக்கு
அனுப்பினால்புண்ணியமாய்ப் போகும் "என்றான்

" ஓ அதை மறந்து போனேனோ " எனச் சொல்லி
அருகில்இருந்த அமைச்சரை அழைத்து
ஏதோ காதில் கிசு கிசுக்க
அவர் உள்ளே சென்று எதையோ எடுத்துவந்து
விபீஷணன் கையில் விபீஷண மகாராஜா அதை
அந்தக் கிராமத்தானின்கையில் மறைத்து மடக்கி
 "இதற்குள் ஒரு உயரிய பொருள் இருக்கிறது
அதை கரை சேரும் வரை திறக்காமல் போனால்
கடல் உனக்குவழிவிட்டுக் கொண்டே போகும்
எக்காரணம் கொண்டும் இடையினில்
திறக்கவேண்டாம் " என அறிவுறுத்தி
அனுப்பி வைத்தார்

கிராமத்தானுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை
அவன் நடக்க நடக்க  கடல்அவனுக்கு மிக அழகாக
அகலமான பாதை அமைத்துக் கொடுத்தது
இருபுறமும் கடலும் நடுவில் பாதையுமாக
நடக்க நடக்க அவனுக்கு
பெருமிதம் பிடிபடவில்லை.

பாதிக்கடல் கடக்கையில் அவனுக்கு கையில்
அப்படி என்னதான்உயரிய பொருள் இருக்கக் கூடும்
 என்கிற ஆவல்பெருத்துக் கொண்டே போனது.
உள்ளங்கையில் நடுவில்மிகச் சிறிதாக்
இருந்து கொண்டு இந்தக் கடலையே நகர்த்தி
வழி விடச் செய்யும் அந்த அதிசியப் பொருளை
அவசியம்பார்த்துதான ஆகவேண்டும் என்கிற
ஆசை வெறியாகக் கிளம்ப ஒரு வெறிபிடித்தவன்
 போல் அவன் உள்ளங்கையை விரிக்கிறான்

உள்ளங்கையில் "ஸ்ரீ ராமஜெயம்" என எழுதப்பட்ட
ஓலை மட்டு மே உள்ளது வேறேதும் இல்லை

அவன் ஏமாற்றமடைந்தவன் போலாகி
 "சே.இவ்வளவுதானா .." எனச்
சொல்லி முடிக்கவும் கடல் அவனை அப்படியே
அள்ளிக் கொண்டு உள்ளே கொண்டு போகவும்
சரியாக இருந்தது

இதைச் சொல்லி முடித்த உபன்யாசகர் "நீங்கள்
பெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீங்களே புரிந்து  கொள்கிற வரையில் பெரியவர்கள்
சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்
இல்லையேல் இந்தக் கிராமத்தான் கதைதான் "
எனச் சொல்லி முடித்தார்

மிகச் சிறுவயதில் இந்தக் கதையை கேட்டபோது
பெரியவர்கள் சொல்கிற எதையும் நம்பிச் செய்தால்
 நிச்சயம் நல்லது என்கிற நம்பிக்கைஎன்னுள்
 ஊறிப் போனதால் தைரியமாக எதையும் செய்யும்
துணிச்சல் எனக்கு இருந்தது

அறிவா அல்லது ஆணவமா என மிகச் சரியாகச்
சொல்லத் தெரியவில்லைகல்லூரி நாட்களில்
இக்கதையில் லாஜிக்கே இல்லாதது போலப் பட்டது
அந்த கிராமத்தான்தான் கடலோடு போய்விட்டானே
 பின்னே இந்தக் கதையை யார் அந்த உபன்யாசகருக்கு
 சொல்லி இருப்பார்கள்என நினைத்து
கேலியாகச் சிரித்திருக்கிறேன்

இப்போது யோசித்துப் பார்க்கையில்  இந்தக் கதை
தரும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையை
சிறுவர்களுக்கு அறிவும் லாஜிக்கும்தருமா
என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Monday, November 30, 2015

கரு நாகத்தின் பலவீனம் -5

நம் வாழ்வில் எவ்வித மாறுதலும் இல்லாமல்நிகழ்வுகளும் செல்லுகிற வரையில் எவ்விதபிரச்சனையும் இல்லை

நாம் பாதுகாப்பு வலையத்தினுள் மிகச்சரியாகவும்அதிகச் சுகமாகவும் மிக பொருந்தி இருப்பதாக எண்ணி நாட்களைக்
கடத்திக் கொண்டிருக்கிறோம்

அதே சமயம் புதியதாகவும் நம் அன்றாடநிகழ்வுகளில் ஒரு தடை ஏற்படுத்துவதாக்வும்ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்குமாயின் அதிர்ச்சி
அடைவதோடு குழம்பியும் போய் அந்தக் குழப்பத்திற்கு பிரச்சனை எனப் பெயரிட்டுதிகைத்து நிற்கிறோம்

இதனைத்தான்கரு நாகத்தின் பலவீனத்தின்முதல் பதிவாகப் போட்டிருந்தேன்அனைவரின் கவனமும் பிரச்சனையில்முழுவதுமாக இருக்கும்படியாக பதிவைமிக கவனமாக எழுதி இருந்தேன்
பின்னூட்டங்களும் அதையே பிரதிபலித்தன.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டோ அல்லதுஅதனுடன் இருந்து கொண்டே எப்போதும் போலஇயல்பாக இருக்க முடிகிற பிரச்சனைகள் குறித்து
நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

மாறாக அதனைத தீர்க்காவிடில்நம் அன்றாட வாழ்வில் அதிகப் பாதிப்பு
ஏற்படும் எனில் அப்போதுதான்அதனைத்தான் உடனடியாக தீர்க்க முயல்கிறோம்

முதல் நிலையாக நமக்குத் தெரிந்த விஷயங்கள்மூலம் முயல்கிறோம்..அது சரிப்பட்டுவரவில்லையெனில் அது குறித்துஅனுபவஸ்தர்களின் பெற முயல்கிறோம்.பின் சாத்தியமானதும்உடனடியாக ஆகக் கூடியதாகவும் உள்ளஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்து செயல் படமுடிவெடுக்கிறோம்

இதைத்தான் இரண்டாம் பதிவாகப் போட்டிருந்தேன்பின்னூட்டங்களிலும் இதன் பிரதிபலிப்புமிகச் சரியாக இருந்தது

பிரச்சனையை அங்குதான் தீர்க்கவேண்டும்என்றாலும் கூடஅதற்கான தீர்வு அங்குதான்இருக்கவேண்டும் என்பதில்லைவிக்கிரமாதித்தன் கதைகளிலோ அல்லதுபிற மந்திர வாதிக்கதைகளிலோஅரக்கனின் உயிர் அவனிடத்து இல்லாதுவேறு எங்கோஒளித்துவைக்கப் பட்டிருப்பதைப்போல
 தீர்வுகளும் வேறு எங்கோ இருக்கலாம்இதனை அறிய ஏற்கெனவே இதுபோல்
இதுவிஷயத்தில் அனுபவப்பட்டவர்களைத்தேடிச் செல்வதே
புத்திசாலித் தனம்

நமக்கு இமாலயப் பிரச்சனையாகத்தெரிகிற பிரச்சனைஅவர்களுக்கு கூழாங்கல்லைப்போலக் கூட எளியதாக இருக்கலாம் .
இதனை வலியுறுத்தும் விதமாகவேபாம்புப் பிடிக்கும் ஊரைத் தேடிப்
போவதையும் அவர்கள் மிக எளிதானஒரு தீர்வு சொன்னதையும் பதிவாகப்போட்டிருந்தேன்'

முதல் பதிவில் பிரச்சனைகளின் தாக்கத்தில் மட்டுமேஇருந்தவர்கள் இரண்டாவதாக அடுத்து என்னஎனத் தொடர்ந்தவர்கள் மூன்றாவதான அந்தப் பலவீனம் என்ன எனஅறிந்து கொள்வதிலேயேஅதிகம்ஆர்வம் காட்டினார்களே ஒழிய பிரச்சனையில்முன் போல அதிகக் கவனம் கொள்ளவில்லை.

நான்காவதாக பிரச்சனையை அனுபவஸ்தர்களின்அறிவுறுத்தலோடு அல்லது அவர்களின் துணையோடுதீர்ப்பது குறித்து எழுதி இருந்தேன்
அனுபவஸ்தர்களாக இருந்தாலும் பிரச்சனையைமுதல் தடவை சந்திக்கிற அதே மனோபாவத்தில்பிரச்சனையை அணுகவேண்டியஅவசியம் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவேபெரியவர் சூழலை ஆராய்வது தன் கைகளைத் துணியால்கட்டிக் கொள்வது செங்கல்லைத் தேர்ந்தெடுப்பது என
நுட்பமான விஷயங்களாகப் பதிவு செய்திருந்தேன்

பாம்புப் பிரச்சனை மட்டுமில்லை.எந்தப் பகாசுரப்பிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமாக அதற்கெனநிச்சயமாகஒரு தீர்வு உண்டு.ஒருவேளை இப்பதிவில்குறிப்பிட்டிருப்பதைப் போல அந்தப் பிரச்சனைக்கு
மிகப் பெரிய பலவீனமான பக்கம் இருக்கவும் நிச்சயம்அதிகச் சாத்தியம் உண்டு எனபதற்காகவேதலைப்பைக் கூட க் கரு நாகத்தின் பல்வீனம்
எனக் குறிப்பிட்டிருந்தேன்

இது நடந்த நிகழ்வுதான்.என்வேதான் இயல்பாகஎழுத முடிந்தது.ஆயினும் இது வெறும் நிகழ்வாகவும்கதை போலவும் மட்டும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக்வேஇத்தனை பகுதிகளாகப் பிரித்து இதனை எழுதினேன்

இதனை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு சிலர்பின்னூட்டமிட்டிருந்தது மனதிற்கு நிறைவாக இருந்ததுஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

Saturday, November 28, 2015

கரு நாகத்தின் பலவீனம்-4

இந்தப் பாம்புப் பிரச்சனை வந்த நாள் முதல்எப்போது வீட்டிற்கு வந்தாலும் முதலில்வண்டியை நடு ரோட்டில் வைத்துவிட்டுகைகளால் சப்தம் கொடுத்தபடியும் செருப்புக் காலைதரையில் தேய்த்தபடியும் வாசல் கதவைத் திறந்துபின் வண்டியை ஸ்டார்ட்செய்து செட்டில்நிறுத்திவிட்டு பின் கதவைத் திறக்கும்படி குரல் கொடுப்பேன்

அப்போதுதான் மனைவி வாசலுக்கே வருவாள்இன்று என்றும் இல்லாத அதிசமாய் வாசல் படியில் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருக்க
ஆச்சரியப்பட்டுப் போனேன்

என் இரண்டாம் பெண்தான் மூன்று மணிக்கேஇன்று பாம்பு வீட்டைக் கிராஸ் செய்துபோய்விட்டதென்றும்அதுதான் தைரியமாக
 வாசலில் உட்கார்ந்திருப்பதாகவும் சொன்னாள்

கூடுதல் தகவலாக இன்றுபாம்புக்கு செம தீனிஎன்றும் வயிறு உப்பலாக இருந்தது என்றும்அதனால் அது மிக மிக மெதுவாகஊர்ந்து சென்றது என்றும் எல்லோரும்வாசல் வராண்டாவில் இருந்தே அதைமிக நன்றாகப் பார்த்ததாகவும் சொன்னாள்

அவர்கள் கண்களில் பிரமிப்பு இருந்த அளவு பயம் இல்லை

எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது

முதன் முதலில் பாம்பைப் பார்த்த போதுஇருந்த பயம்அது படமெடுத்து வாசல் கதவில்நின்ற போதுஏற்பட்ட நடுக்கம் எல்லாம்எங்கே போனது என எனக்கே ஆச்சரியமாக இருந்தது

ஒருவேளை புரியாதது அல்லது புதியதுதான்முதலில் பயத்தையும் பதட்டத்தையும்ஏற்படுத்துமோ? எத்தனை மோசமானதாகிலும்
பழகிவிட்டால்பயமும் பதட்டமும்பறந்து விடுமோ எனத் தோன்றியது

பின் செயற்கரிய செயல் போல கிராமத்திற்குச் சென்று பாம்பு பிடிப்பவனைப் பார்த்து வந்தது குறித்தும்அடிக்காமலும் பிடிக்காமலும் அதை எளிதாகஇல்லாமல் செய்வது குறித்த தகவலையும்அவளிடம் ஆவலாக விவரிக்க அவள் "அப்படியா "என்கிற ஒற்றைக் குரலோடு முடித்துக் கொண்டாள்

எனக்கே எதற்கடா விளக்கினோம் என எரிச்சலாக வந்தது

மறு நாள் அலுவலக விடுமுறை என்பதால் நான்வீட்டிலேயே இருந்தேன். அந்த பாம்பு பிடிக்கும்பெரியவரும் காலையிலேயே வீட்டிற்கு அந்தத்
தலைவருடனே வந்து விட்டார்.வந்தவர்அது வருகிற வழி அது போகிற இடம் உத்தேசமாக்அது பதுங்கும் பொந்தின் திசை எல்லாம்காண்பிக்கச் சொன்னார்

.நாங்கள் காண்பித்தோம்

பின் அவர் மட்டும் நாங்கள் பொந்து இருக்கும்இடம் என குறிப்பிட்ட இடத்திற்கு சிறிது நேரம்உலாத்தினார்.பின் ஒரு குறிப்பிட்ட பொந்தின்
அருகில் லேசாக குனிந்து பார்த்தார்.
பின் என்னை மட்டும் அருகில் அழைத்தார்

பின் அவர் முன் இருந்த பொந்தைக் காண்பித்து
" இதற்குள்தான் ஐயா இருக்காக " என்றார்

"எப்படிச் சொல்கிறீர்கள் " என்றேன்

"அவங்க மூச்சுக் காத்துக்கே அத்தனை விஷமுண்டுபொந்து சுத்தி செத்துக் கிடக்கிற தட்டானையும்ஈயையும் பார்த்தீர்களா " என்றார்

அந்தப் பொந்தைச் சுற்றி நிறையத் தட்டான்களும்
ஈக்களும் இறந்து கிடந்தன

பின் மெதுவாக " இவக மூச்சுக் காத்துப் பட்டுஎல்லாம் செத்துக் கிடக்குதுகள்.இவக விஷத்துக்கு அவ்வளவு பவர் " என்றார்

பின் இடத்தை விட்டு வெளியேறி வீ ட்டைச் சுற்றிசிதறிக்கிடந்த செங்கல் நான்கைக் கையில் எடுத்துக்கொண்டு பொந்தின் வாய் இருந்த திசைக்குப் பின்னால்நின்று கொண்டார்.பின் கையில் துணியைச்
சுற்றிக் கொண்டு மெதுவாகக் குனிந்து முதல்செங்கல்லை பொந்தில் வாயில் அடைத்துமிக வேகமாக அடுத்து அடுத்து மூன்றுசெங்கல்லையும்அந்த பொந்திலேயே திணித்தார்.

பின் மண் வெட்டிஎடுத்துவரச் சொல்லி சுற்றி இருக்கிறமண்ணை வெட்டி அந்த இடத்தை மேடாக்கிவிட்டுவந்து வாசல் திண்ணையில் அமர்ந்தார்
அவர் தைரியமாகத் தன்னைக் காட்டிக் கொணடாலும்கண்களில் மிரட்சியும் உடல் நடுக்கமும் லேசாகத் தெரியத்தான் செய்தது

பின் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லிகுடித்துவிட்டு " ஊரையே மிரட்டுகிற இவகளுக்குபொந்து தோண்டவும் தெரியாது.பொந்தை அடைச்சா
வெளியே வரவும் தெரியாது " என்றார்

Friday, November 27, 2015

கரு நாகத்தின் பலவீனம் -3

ஒரு வழியாக பாம்பை அடிக்கக்கூடாது எனவும்பாம்பாட்டியை அழைத்து பிடித்துப் போவது எனமுடிவு செய்தவுடன் உடன் அதற்கான
தகவலகளைவிசாரிக்கத் துவங்கினேன்

இப்போது என்றால் பாம்பு பிடிப்பவரின் செல் நம்பர்கூட டைரக்டரியிலேயே கிடைக்கிறது.முன்பெல்லாம்அப்படி இல்லை.அவர்களைத் தேடி அவர்கள் இருக்கும்கிராமத்திற்குத்தான் போகவேண்டும்

அதன்படி எனது நிர்வாகக் கட்டுப்பாட்டில்இருந்த ஒரு கிராமத்தில் பாம்பு பிடிக்கிறவர்கள்அதிகம் இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டு அங்கு போய்
விசாரிக்கத் துவங்கினேன்.

அங்கு போய் விசாரிக்கையில்தான் பாம்பு பிடித்துஅதன் தோலை உரித்து விற்று அதைஒரு தொழிலாக செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம்
அதிகாரிகள் அடிக்கடி வந்து பாம்பு பிடிக்கத்தடை உள்ளதாகச் சொல்லி ரெய்ட் வந்துபாம்புத் தோலை பறிமுதல் செய்து போவதோடு
அல்லாமல் கேஸும் பதிவு செய்வதால்வெறுப்படைந்து  போய் பாம்பு பிடிக்கும் தொழிலையேவிட்டு விட்டு சித்தாள் வேலைக்கும்
 நிமிந்தாள் வேலைக்கும் போய்க்கொண்டிருப்பதாகச்சொன்னார்கள்

பின் அந்த கிராமத் தலைவரிடம் என் நிலைமையைச்சொல்லி எப்படியாவது  கொஞ்சம் தெளிவானஒருவரை மட்டும்எனக்காக அனுப்பிவைக்கும்படிகேட்டுக் கொள்ளஅவர் உடன் ஊருக்குள்
தகவல் சொல்லி ஒரு பெரியவரை அழைத்துவந்துஎன் முன் நிறுத்தினார்

அவர் முழுக் கதையையும் கேட்டுவிட்டு "இதற்குப் போயா இத்தனை தூரம் வந்தீர்கள்இப்படிச் செய்தால் போதுமே .அந்தக் கரு நாகம்அத்தோடு மண்ணாகிப் போகுமே " எனநான் செய்ய வேண்டியதைச் சொல்ல
 எனக்கே ப்.பூ.. கரு நாகத்தின் பலம்அவ்வளவுதானாஎனப் பட்டது

பாக்கியராஜ் அவர்கள் டார்லிங் டார்லிங் படத்தில்இறுதிக் காட்சியில் மனம் வெறுத்துப் போய்தற்கொலை செய்து கொள்வதற்காக மலை உச்சிக்கு
விரைந்து கொண்டிருப்பார்..அவர் காதலிஅவரைத் தடுத்து நிறுத்த தொடர்ந்துகத்திக் கொண்டே வர இவர் அதனைக் கண்டு
கொள்ளாது மலை உச்சிக்கே வந்து நின்றுகுதிக்கப் போகிற பாவனையில்
முகத்தில் ஒரு உணர்ச்சிக் குவியலைக் காட்டுவார்

அதில் அந்த மலையின் அதல பாதாளமேஅவர் முகத்தில் பிரதிபலிப்பதாகத் தெரியும்நாமும் அதிர்ந்து போய் இருக்கையின் நுனிக்கே
வந்து விடுவோம்.அடுத்த காட்சியில்மலைச் சரிவுக்கு பதிலாக அவருக்கு முன்னே அகலமான அழகான தார்ச் சாலையும் அதில்
காரும் பஸ்ஸும் போய்க்கொண்டிருக்கும்

நம்மையும் அறியாது நாமும் அவரின் காதலியோடுசிரிக்கத் துவங்கிவிடுவோம்

அந்தப் பெரியவர் அந்த கரு நாகத்தைக்கொல்வதற்குச் சொன்னவழியைக் கேட்டதும்எனக்குள் ஏனோ இந்தக் காட்சிதான்உடன் நினைவுக்கு வந்துபோனது

(தொடரும் )

Tuesday, November 24, 2015

கரு நாகத்தின் பலவீனம் -2

நானும் வெலவெலத்துப் போனேன்

சினிமாவில் பார்ப்பது என்பது வேறு,பாம்பாட்டியின்அருகில்பாதுகாப்புடன் இருந்து பார்ப்பது என்பது வேறுஅல்லதுஅவசர கதியில் எங்காவது
போய்க்கொண்டிருக்கும்போது பார்ப்பது என்பது வேறு.

ஆனாலஇப்படி வீட்டு வாசலில்முழுவீட்டையும் ஆக்கிரமித்து மிரட்டுகிற மாதிரிபடமெடுத்துப் பார்க்க ஏற்பட்ட பாதிப்பில் இருந்து
என்னால் வெகு நேரம் மீளவே முடியவில்லை

வாசல் விளக்கைப் போட்டபடி அதனுடையைநகர்வை தெரிந்து கொள்வோம் என நானும்அரை மணி நேரத்திற்கு மேலாக வாசல் வராண்டாவில்
அமர்ந்திருக்க அதுவும் அதற்குரிய இடத்தில்இருப்பதானதோரணையில்
 அலட்சியமாக அமர்ந்திருந்தது

 எங்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புஎன்பதைவிட எங்கள் வீடு தேடி இப்போது யாரும்வந்துவிடக் கூடாதே என்கிற பயமே அதிகம் இருந்தது
அதனால் மாடிக்கு என் மனைவியை அனுப்பிஎங்கள் வீட்டுக்கு அடுத்திருந்த திருப்பத்தில் யார்வந்தாலும் எச்சரிக்கை செய்யும்படி அனுப்பிவைத்தேன்

நல்லவேளை யாரும் வரவில்லை.நாகமும் பின்சர்வ சாதாரண்மாக இறங்கி வழக்கம்போல் செல்லும்பொந்தின் பக்கம் நகரத் துவங்கியது.

என்னால் இரவுமுழுவதும் தூங்க் முடியவில்லை

நானும் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதால்பாம்பு குறித்து எனக்குஅதீத பயம் கிடையாதுஆயினும் எதிர்பாராது அதன் அருகில் யாரும்
வர நேர்ந்தால தன்னை தற்காத்துக் கொள்ளும்நோக்கில்நிச்சயம் தீண்டிவிடும் என்பதில்எனக்கு எவ்வித சந்தேகமும்    இல்லை.

மனிதர்கள் இயல்பாகப் புழங்குகிறபகுதியில்எப்போது எது நேரம் என உறுதி சொல்ல முடியாதுஎன்பதால் நிச்சயம் இதற்கு ஒருமுடிவுசெய்யவேண்டும்என முடிவெடுத்து இரவுஎப்போதோ என்னை அறியாதுஉறங்கிபோனேன்

மறு நாள் எழுந்து முதல் வேலையாக அக்கம் பக்கம்வீட்டில் உள்ளவர்களிடம் இதுவிவரம் தெரிவித்துஎன்ன செய்யலாம் இப்படியே தொடர்வதில் உள்ள
ஆபத்தை விளக்கி அதனை அடித்துக் கொல்லலாம் எனமுடிவு செய்தோம்

ஆயினும் அதிலும் இரண்டு சிக்கல் இருந்தது

என் வீட்டிலும் அடுத்திருந்த வீட்டில்இருந்த பெண்களும்நாகத்தை அடித்துக் கொல்வதுபாவம் என்றும்அதற்கு உறுதியாய்சம்மதிக்கமாட்டோம் என்றும் யாராவதுபாம்பாட்டியை அழைத்துவந்துபிடித்துப் போகத்தான்
செய்யவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்

இரண்டாவது அதனுடைய ஆகிருதியைநேரடியாகப்பார்த்தவர்கள் நிச்சயம் அதனை  அடிக்கத் தயங்கத்தான் செய்வார்கள்.
மேலும் அதுமிகச்சுதாரிப்பாக காம்பௌண்ட் சுவரை ஒட்டியே
மிகக் கவனமாகச்செல்வதால் மிகச் சரியாகஒரு அடியில்கவனித்து அடித்தால் ஒழியஅதனை அடித்துக்கொல்வது என்பது நிச்சயம்
 சாத்தியமில்லை.

ஒருவேளை அடிக்க முயன்றுதவறிப்போனால் அதற்கும் நமக்கும் உள்ள
சுமுக உறவில்ஏற்படுத்தும் பாதிப்பை தாங்கிக்கொள்கிற தைரியம் எங்களில் எவருக்கும் இல்லை.

என்வே முடிவாக எங்கள் நகருக்குஅருகில் உள்ளகிராமத்திற்குச் சென்று பாம்பு பிடிக்கிறவரை அழைத்துவந்து பிடித்துக் கொண்டுபோகச் சொல்வது என ஏக மனதாக முடிவெடுத்தோம்

அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை

(தொடரும் )

Monday, November 23, 2015

கரு நாகத்தின் பலவீனம்

அப்போது நாங்கள் ஒரு வாய்க்காலைஒட்டிய வீட்டில் குடியிருந்தோம்
வாய்க்காலை ஒட்டிய வீட்டில் இருந்தால்என்ன என்ன பிரச்சனைகள் இருக்குமோஅத்தனை பிரச்சனைகளும் எங்களுக்கு இருந்தது

மழைக் காலங்களில் அதிகமானக் கொசுக்கடிவிதம் விதமான பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் நீரில் மூழ்கிய மேடு பள்ளச் சாலைகள்
சுகாதாரக் கேடு விளைவிக்கும் சாக்கடைகலந்த குடி நீர்இவையெல்லாம் கூட எங்களுக்கு ஒருமாதிரிபழகிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையில்

 ஒரு நாள்....

நாங்கள் வளர்த்து வந்த அல்சேஷன் நாய் ஒருவித்தியாசமான குரலில் குரைக்க   ஆரம்பித்ததுநாங்கள் அவசரமாய் ஓடிப் போய்ப் பார்க்க
இருட்டில் ஒன்றும் புரியவில்லை. சரி ஒன்றுமில்லைஏதாவது புதியதாக வேறு பகுதி நாய் வந்திருக்கும்அதனால்தான் இப்படி வித்தியாசமாகக்
 குரைக்கிறது  என எங்களை நாங்களேசமாதானம் செய்து கொண்டு படுத்துவிட்டோம்

மறு நாள்

பகல் பொழுதில் நாய் மீண்டும்அதே மாதிரிக் குரைக்க  அவசரம் அவசரமாய்
வாசல் கதவைத் திறந்து பார்க்க அதிர்ந்து போனோம்.ஒரு ஆறடிக்குக் குறையாத கன்னங்கரேலெனஒரு பெரிய பாம்பு வீட்டு மதிலோரம்
அலட்சியமாக ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது

அதனுடைய உடல் மினுமினுப்பு பருமன் நிறம்எங்களுக்குள் ஒரு கிலியை ஏற்படுத்திப் போகஎன்ன செய்வது என அறியாமல்
திகைத்துப் போய் நின்றோம்

அது எங்களை யாரையும் ஒரு பொருட்டாகக்கருதாதுஅதன் போக்கில் மெதுவாகக்காம்பௌண்டைக் கடந்து வீட்டை அடுத்திருந்த
புதருக்குள் மறைந்து போனது

அடுத்து உடனடி நடவடிக்கையாககாம்பௌண்டுச்சுவருக்கு அருகில் இருந்த
 செடி கொடிகளையெல்லாம்சுத்தம் செய்து அடுத்த வீட்டுக் காரர் சொன்ன
ஐடியாவின்படி மஞ்சள் கரைத்துத் தெளித்துஅருகில் இருந்தகோவிலுக்குப் போய்நாக கன்னிகளுகளுக்கு பால் அபிஷேகம்செய்து இனி பாம்புப் பிரச்சனை இருக்காது எனநாங்கள் எங்களை  தைரியப் படுத்துக் கொள்ள
 முயற்சித்துக் கொண்டிருந்தோம்

ஆனால் எங்களுடைய இத்தனை பிரயத்தனங்களும்அந்தப் பாம்பிடம் எந்தவித பாதிப்பினையும்ஏற்படுத்தவில்லை

மாறாக ஒரு நாளைக்கு ஒருமுறை போய்வந்ததுஇரண்டுமுறை
போய் வர ஆரம்பித்தது.

எங்கள் வீட்டு நாய் கூட முதலில்பயந்து ஒரு மாதிரியான குரலில் குரைத்தது
இப்போது ஒரு சிறு தகவல் தெரிவிப்பது போலவித்தியாசமான குரலில்குரைக்க மட்டும் செய்தது

அதன் குரலில் பழைய பதட்டமோ பயமோ இல்லை

நாங்கள் கூட இரயில் தண்டவாளத்தின்அருகில் வசிப்பவர்கள் ரயில் சப்தத்தை வைத்துஇத்தனை மணிக்கு இந்த ரயில் போகும் என
அந்த சப்தத்தோடு தங்களைச் சம்பத்தப்படுத்திக்கொள்வதைப் போல நாங்களும் நாயின்குரலை வைத்து பாம்பு கிராஸ் செய்து
கொண்டு உள்ளது எனத் தெரிந்து கொண்டுபயமோ பதட்டமோ இல்லாமல்
எங்களுடைய வேலைகளை நாங்கள் கவனிக்கப பழகிவிட்டோம்

இந்த்ச் சூழலில் ஒரு நாள் மாலை மிக லேசாகஇருள்பரவத் துவங்கிய சமயத்தில்வாசல் பக்கம் போனஎனது பெண் திடுமேனகத்தியபடி ஓடி வந்து என் மடியில்முகம் புதைத்துசப்தமாக பயந்து அலற ஆரம்பித்தாள்
உட்ல் தெப்பமாய் வேர்த்துக் கொட்டஉடல் நடுங்கிக் கொண்டிருந்தது

நானும் பயந்து போய் அவளை கீழேபடுக்கவைத்துவிட்டுவாசல் பக்கம் வந்து பார்க்க வாசல் கேட் கதவின் மேல்முழுவுடலையும்கிடத்திப படமெடு த்தபடி

அந்தக் கரு நாகம்
சாவகாசமாக காற்று வாங்கிக் கொண்டிருந்தது          
                                                                   

 (தொடரும் )