Wednesday, December 23, 2015

நம்பிக்கை

சிறுவயதில் ஏதோ ஒரு உபன்யாசத்தில் கேட்ட கதை
கேட்ட இடம் வயது சொன்னவர் என எதுவுமே
சுத்தமாகஎன் நினைவினில் இல்லை.
ஆயினும் கதை மட்டும் எப்படியோ
என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது
அதுவும் என்னை விடவில்லை
எனக்கும் அதை விட இஷ்டமில்லை
இன்றும் கடலுக்கடியில் பழைய இலங்கை
இருப்பதாகவும்அதை விபீஷணன்
ஆண்டு கொண்டிருப்பதாகவும் வருஷத்தில்
ஒரு குறிப்பிட்ட நாளில் ந்ள்ளிரவில் அரக்கர்கள்
 புடை சூழஇராமேஸ்வரம் வந்து ராமர் பாதம்
 தரிசித்துப்போவதாகவும்அந்த உபன்யாஸ்கர் மிக
அழகாக விளக்கினார்

அப்படி ஒரு சமயம் அவர்கள் ராமேஸ்வரம் வந்து
திரும்பிக் கொண்டிருக்கையில்அதை பார்த்துக்
கொண்டிருந்தகிராமவாசி ஒருவன் எங்குதான்
போகிறார்கள்எனப் பார்த்துவிடுவோம் என்கிற
ஆர்வ மிகுதியால்அரக்கர்கள் சுமந்து வந்த பெரிய
பூக் கூடைக்குள்ஏறி ஒளிந்து கொள்கிறான்
என்ன நடக்கிறது எங்கு போகிறார்கள்
எப்படிப் போகிறார்கள் என்பது எதுவும்
அவனுக்குத் தெரியவில்லை.இரவெல்லாம்
கடலோசை மட்டும்கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அப்படியே அசந்து தூங்கியும் போகிறான்

விடிந்து கூடைக்குள் இருந்து வெளியேறிப்
பார்த்தால் மிகப் பெரியதங்கத்தாலேயான ஆன
அரண்மனைக்குள் அவன் இருப்பது தெரிகிறது
அதன் பிரமாண்டம் அதன் வசீகரம் இவற்றில் மயங்கி
 வாய்பிளந்து
நின்று கொண்டிருந்தவனை காவல் புரிந்து
கொண்டிருந்த அரக்கர்கள்பார்த்துவிடுகிறார்கள்.
நரன் இங்கு வர சந்தர்ப்பம் இல்லையே
எப்படி வந்தான் எனத் தீவீரமாக விசாரிக்க
அவன் நடந்ததையெல்லாம்விரிவாகச் சொல்லி
அழ அவனை நேராக விபீஷன
மகாராஜாவிடம்கொண்டுபோய் சேர்க்கிறார்கள்

அவன் வந்த முழு விவரத்தையும் கேட்டறிந்த
விபீஷண மகராஜா"சரி ஏதோ ஆர்வ மிகுதியால்
இந்த மனிதன் எப்படியோ நம் நகருக்கு
வந்து விட்டான்.நம் நாடு வந்தவன் நமக்கு
விருந்தாளி போலத்தான்அவனுக்கு நம் நாடு
முழுவதையும் சுற்றிக் காண்பியுங்கள்
ஒருவாரம் முடிந்து அவனை நாமே
அனுப்பிவைக்கலாம் "என்றார்

ஒருவாரம் அவனுக்கு ராஜாங்க விருந்து
 உபச்சாரம் தடபுடலாக நடந்தது
அரண்மனை ,அசோக வனம் என என்ன என்ன
 பார்க்க முடியுமோஅதையெல்லாம்அவன் ஆசை
 தீரும் மட்டும் சுற்றிக் காட்டினார்கள்.
தொட்டிக்குள் மீனை நாம்வெளியில் இருந்து
பார்ப்பதுபோல் இவர்கள் வெட்டவெளியில் இருக்க
இவர்களைச் சுற்றி கடலிருப்பதைப் பார்க்க
மலைத்துப் போனான்என்ன புண்ணியம் செய்தோம்
எனத் தெரியவில்லையே எனஎண்ணி எண்ணி
மிகவும் குதூகலம் கொண்டான்அந்த கிராமவாசி.
இப்படியே ஒருவாரம் மிக மகிழ்ச்சியுடம் முடிந்ததும்
அரக்கர்கள் மீண்டும் அடுத்த உத்தரவுக்காக
மகராஜாவிடம் கொண்டு நிறுத்தினார்கள்

"மகிழ்ச்சியா " என விசாரித்த விபீஷண மகாராஜா
முதுகில்சுமக்கும் அளவுபொன்னும்
பொருளும் கொடுத்துஅரண்மனை வாயில் வரை
வந்து "சென்று வா " எனஅனுப்பிவைத்தான்.
அதுவரை மகிழ்ச்சியில்திக்கு முக்காடிக்கொண்டிருந்த
கிராமத்தானுக்கு மேலேகடல் இருப்பதும்
தான் கடலுக்கு அடியில் இருப்பதுவும்
அப்போதுதான் லேசாகப் புரியத் துவங்கியது

" மகாராஜா மன்னிக்க வேண்டும் தங்களுக்கு
தெரியாது இல்லைநான் சாதாரண மானிடன்.
இந்தப் பெரும் கடலை எப்படிக் கடந்து
கரை சேர இயலும் யாரையாவது துணைக்கு
அனுப்பினால்புண்ணியமாய்ப் போகும் "என்றான்

" ஓ அதை மறந்து போனேனோ " எனச் சொல்லி
அருகில்இருந்த அமைச்சரை அழைத்து
ஏதோ காதில் கிசு கிசுக்க
அவர் உள்ளே சென்று எதையோ எடுத்துவந்து
விபீஷணன் கையில் விபீஷண மகாராஜா அதை
அந்தக் கிராமத்தானின்கையில் மறைத்து மடக்கி
 "இதற்குள் ஒரு உயரிய பொருள் இருக்கிறது
அதை கரை சேரும் வரை திறக்காமல் போனால்
கடல் உனக்குவழிவிட்டுக் கொண்டே போகும்
எக்காரணம் கொண்டும் இடையினில்
திறக்கவேண்டாம் " என அறிவுறுத்தி
அனுப்பி வைத்தார்

கிராமத்தானுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை
அவன் நடக்க நடக்க  கடல்அவனுக்கு மிக அழகாக
அகலமான பாதை அமைத்துக் கொடுத்தது
இருபுறமும் கடலும் நடுவில் பாதையுமாக
நடக்க நடக்க அவனுக்கு
பெருமிதம் பிடிபடவில்லை.

பாதிக்கடல் கடக்கையில் அவனுக்கு கையில்
அப்படி என்னதான்உயரிய பொருள் இருக்கக் கூடும்
 என்கிற ஆவல்பெருத்துக் கொண்டே போனது.
உள்ளங்கையில் நடுவில்மிகச் சிறிதாக்
இருந்து கொண்டு இந்தக் கடலையே நகர்த்தி
வழி விடச் செய்யும் அந்த அதிசியப் பொருளை
அவசியம்பார்த்துதான ஆகவேண்டும் என்கிற
ஆசை வெறியாகக் கிளம்ப ஒரு வெறிபிடித்தவன்
 போல் அவன் உள்ளங்கையை விரிக்கிறான்

உள்ளங்கையில் "ஸ்ரீ ராமஜெயம்" என எழுதப்பட்ட
ஓலை மட்டு மே உள்ளது வேறேதும் இல்லை

அவன் ஏமாற்றமடைந்தவன் போலாகி
 "சே.இவ்வளவுதானா .." எனச்
சொல்லி முடிக்கவும் கடல் அவனை அப்படியே
அள்ளிக் கொண்டு உள்ளே கொண்டு போகவும்
சரியாக இருந்தது

இதைச் சொல்லி முடித்த உபன்யாசகர் "நீங்கள்
பெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீங்களே புரிந்து  கொள்கிற வரையில் பெரியவர்கள்
சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்
இல்லையேல் இந்தக் கிராமத்தான் கதைதான் "
எனச் சொல்லி முடித்தார்

மிகச் சிறுவயதில் இந்தக் கதையை கேட்டபோது
பெரியவர்கள் சொல்கிற எதையும் நம்பிச் செய்தால்
 நிச்சயம் நல்லது என்கிற நம்பிக்கைஎன்னுள்
 ஊறிப் போனதால் தைரியமாக எதையும் செய்யும்
துணிச்சல் எனக்கு இருந்தது

அறிவா அல்லது ஆணவமா என மிகச் சரியாகச்
சொல்லத் தெரியவில்லைகல்லூரி நாட்களில்
இக்கதையில் லாஜிக்கே இல்லாதது போலப் பட்டது
அந்த கிராமத்தான்தான் கடலோடு போய்விட்டானே
 பின்னே இந்தக் கதையை யார் அந்த உபன்யாசகருக்கு
 சொல்லி இருப்பார்கள்என நினைத்து
கேலியாகச் சிரித்திருக்கிறேன்

இப்போது யோசித்துப் பார்க்கையில்  இந்தக் கதை
தரும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையை
சிறுவர்களுக்கு அறிவும் லாஜிக்கும்தருமா
என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Monday, November 30, 2015

கரு நாகத்தின் பலவீனம் -5

நம் வாழ்வில் எவ்வித மாறுதலும் இல்லாமல்நிகழ்வுகளும் செல்லுகிற வரையில் எவ்விதபிரச்சனையும் இல்லை

நாம் பாதுகாப்பு வலையத்தினுள் மிகச்சரியாகவும்அதிகச் சுகமாகவும் மிக பொருந்தி இருப்பதாக எண்ணி நாட்களைக்
கடத்திக் கொண்டிருக்கிறோம்

அதே சமயம் புதியதாகவும் நம் அன்றாடநிகழ்வுகளில் ஒரு தடை ஏற்படுத்துவதாக்வும்ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்குமாயின் அதிர்ச்சி
அடைவதோடு குழம்பியும் போய் அந்தக் குழப்பத்திற்கு பிரச்சனை எனப் பெயரிட்டுதிகைத்து நிற்கிறோம்

இதனைத்தான்கரு நாகத்தின் பலவீனத்தின்முதல் பதிவாகப் போட்டிருந்தேன்அனைவரின் கவனமும் பிரச்சனையில்முழுவதுமாக இருக்கும்படியாக பதிவைமிக கவனமாக எழுதி இருந்தேன்
பின்னூட்டங்களும் அதையே பிரதிபலித்தன.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டோ அல்லதுஅதனுடன் இருந்து கொண்டே எப்போதும் போலஇயல்பாக இருக்க முடிகிற பிரச்சனைகள் குறித்து
நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

மாறாக அதனைத தீர்க்காவிடில்நம் அன்றாட வாழ்வில் அதிகப் பாதிப்பு
ஏற்படும் எனில் அப்போதுதான்அதனைத்தான் உடனடியாக தீர்க்க முயல்கிறோம்

முதல் நிலையாக நமக்குத் தெரிந்த விஷயங்கள்மூலம் முயல்கிறோம்..அது சரிப்பட்டுவரவில்லையெனில் அது குறித்துஅனுபவஸ்தர்களின் பெற முயல்கிறோம்.பின் சாத்தியமானதும்உடனடியாக ஆகக் கூடியதாகவும் உள்ளஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்து செயல் படமுடிவெடுக்கிறோம்

இதைத்தான் இரண்டாம் பதிவாகப் போட்டிருந்தேன்பின்னூட்டங்களிலும் இதன் பிரதிபலிப்புமிகச் சரியாக இருந்தது

பிரச்சனையை அங்குதான் தீர்க்கவேண்டும்என்றாலும் கூடஅதற்கான தீர்வு அங்குதான்இருக்கவேண்டும் என்பதில்லைவிக்கிரமாதித்தன் கதைகளிலோ அல்லதுபிற மந்திர வாதிக்கதைகளிலோஅரக்கனின் உயிர் அவனிடத்து இல்லாதுவேறு எங்கோஒளித்துவைக்கப் பட்டிருப்பதைப்போல
 தீர்வுகளும் வேறு எங்கோ இருக்கலாம்இதனை அறிய ஏற்கெனவே இதுபோல்
இதுவிஷயத்தில் அனுபவப்பட்டவர்களைத்தேடிச் செல்வதே
புத்திசாலித் தனம்

நமக்கு இமாலயப் பிரச்சனையாகத்தெரிகிற பிரச்சனைஅவர்களுக்கு கூழாங்கல்லைப்போலக் கூட எளியதாக இருக்கலாம் .
இதனை வலியுறுத்தும் விதமாகவேபாம்புப் பிடிக்கும் ஊரைத் தேடிப்
போவதையும் அவர்கள் மிக எளிதானஒரு தீர்வு சொன்னதையும் பதிவாகப்போட்டிருந்தேன்'

முதல் பதிவில் பிரச்சனைகளின் தாக்கத்தில் மட்டுமேஇருந்தவர்கள் இரண்டாவதாக அடுத்து என்னஎனத் தொடர்ந்தவர்கள் மூன்றாவதான அந்தப் பலவீனம் என்ன எனஅறிந்து கொள்வதிலேயேஅதிகம்ஆர்வம் காட்டினார்களே ஒழிய பிரச்சனையில்முன் போல அதிகக் கவனம் கொள்ளவில்லை.

நான்காவதாக பிரச்சனையை அனுபவஸ்தர்களின்அறிவுறுத்தலோடு அல்லது அவர்களின் துணையோடுதீர்ப்பது குறித்து எழுதி இருந்தேன்
அனுபவஸ்தர்களாக இருந்தாலும் பிரச்சனையைமுதல் தடவை சந்திக்கிற அதே மனோபாவத்தில்பிரச்சனையை அணுகவேண்டியஅவசியம் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவேபெரியவர் சூழலை ஆராய்வது தன் கைகளைத் துணியால்கட்டிக் கொள்வது செங்கல்லைத் தேர்ந்தெடுப்பது என
நுட்பமான விஷயங்களாகப் பதிவு செய்திருந்தேன்

பாம்புப் பிரச்சனை மட்டுமில்லை.எந்தப் பகாசுரப்பிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமாக அதற்கெனநிச்சயமாகஒரு தீர்வு உண்டு.ஒருவேளை இப்பதிவில்குறிப்பிட்டிருப்பதைப் போல அந்தப் பிரச்சனைக்கு
மிகப் பெரிய பலவீனமான பக்கம் இருக்கவும் நிச்சயம்அதிகச் சாத்தியம் உண்டு எனபதற்காகவேதலைப்பைக் கூட க் கரு நாகத்தின் பல்வீனம்
எனக் குறிப்பிட்டிருந்தேன்

இது நடந்த நிகழ்வுதான்.என்வேதான் இயல்பாகஎழுத முடிந்தது.ஆயினும் இது வெறும் நிகழ்வாகவும்கதை போலவும் மட்டும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக்வேஇத்தனை பகுதிகளாகப் பிரித்து இதனை எழுதினேன்

இதனை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு சிலர்பின்னூட்டமிட்டிருந்தது மனதிற்கு நிறைவாக இருந்ததுஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

Saturday, November 28, 2015

கரு நாகத்தின் பலவீனம்-4

இந்தப் பாம்புப் பிரச்சனை வந்த நாள் முதல்எப்போது வீட்டிற்கு வந்தாலும் முதலில்வண்டியை நடு ரோட்டில் வைத்துவிட்டுகைகளால் சப்தம் கொடுத்தபடியும் செருப்புக் காலைதரையில் தேய்த்தபடியும் வாசல் கதவைத் திறந்துபின் வண்டியை ஸ்டார்ட்செய்து செட்டில்நிறுத்திவிட்டு பின் கதவைத் திறக்கும்படி குரல் கொடுப்பேன்

அப்போதுதான் மனைவி வாசலுக்கே வருவாள்இன்று என்றும் இல்லாத அதிசமாய் வாசல் படியில் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருக்க
ஆச்சரியப்பட்டுப் போனேன்

என் இரண்டாம் பெண்தான் மூன்று மணிக்கேஇன்று பாம்பு வீட்டைக் கிராஸ் செய்துபோய்விட்டதென்றும்அதுதான் தைரியமாக
 வாசலில் உட்கார்ந்திருப்பதாகவும் சொன்னாள்

கூடுதல் தகவலாக இன்றுபாம்புக்கு செம தீனிஎன்றும் வயிறு உப்பலாக இருந்தது என்றும்அதனால் அது மிக மிக மெதுவாகஊர்ந்து சென்றது என்றும் எல்லோரும்வாசல் வராண்டாவில் இருந்தே அதைமிக நன்றாகப் பார்த்ததாகவும் சொன்னாள்

அவர்கள் கண்களில் பிரமிப்பு இருந்த அளவு பயம் இல்லை

எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது

முதன் முதலில் பாம்பைப் பார்த்த போதுஇருந்த பயம்அது படமெடுத்து வாசல் கதவில்நின்ற போதுஏற்பட்ட நடுக்கம் எல்லாம்எங்கே போனது என எனக்கே ஆச்சரியமாக இருந்தது

ஒருவேளை புரியாதது அல்லது புதியதுதான்முதலில் பயத்தையும் பதட்டத்தையும்ஏற்படுத்துமோ? எத்தனை மோசமானதாகிலும்
பழகிவிட்டால்பயமும் பதட்டமும்பறந்து விடுமோ எனத் தோன்றியது

பின் செயற்கரிய செயல் போல கிராமத்திற்குச் சென்று பாம்பு பிடிப்பவனைப் பார்த்து வந்தது குறித்தும்அடிக்காமலும் பிடிக்காமலும் அதை எளிதாகஇல்லாமல் செய்வது குறித்த தகவலையும்அவளிடம் ஆவலாக விவரிக்க அவள் "அப்படியா "என்கிற ஒற்றைக் குரலோடு முடித்துக் கொண்டாள்

எனக்கே எதற்கடா விளக்கினோம் என எரிச்சலாக வந்தது

மறு நாள் அலுவலக விடுமுறை என்பதால் நான்வீட்டிலேயே இருந்தேன். அந்த பாம்பு பிடிக்கும்பெரியவரும் காலையிலேயே வீட்டிற்கு அந்தத்
தலைவருடனே வந்து விட்டார்.வந்தவர்அது வருகிற வழி அது போகிற இடம் உத்தேசமாக்அது பதுங்கும் பொந்தின் திசை எல்லாம்காண்பிக்கச் சொன்னார்

.நாங்கள் காண்பித்தோம்

பின் அவர் மட்டும் நாங்கள் பொந்து இருக்கும்இடம் என குறிப்பிட்ட இடத்திற்கு சிறிது நேரம்உலாத்தினார்.பின் ஒரு குறிப்பிட்ட பொந்தின்
அருகில் லேசாக குனிந்து பார்த்தார்.
பின் என்னை மட்டும் அருகில் அழைத்தார்

பின் அவர் முன் இருந்த பொந்தைக் காண்பித்து
" இதற்குள்தான் ஐயா இருக்காக " என்றார்

"எப்படிச் சொல்கிறீர்கள் " என்றேன்

"அவங்க மூச்சுக் காத்துக்கே அத்தனை விஷமுண்டுபொந்து சுத்தி செத்துக் கிடக்கிற தட்டானையும்ஈயையும் பார்த்தீர்களா " என்றார்

அந்தப் பொந்தைச் சுற்றி நிறையத் தட்டான்களும்
ஈக்களும் இறந்து கிடந்தன

பின் மெதுவாக " இவக மூச்சுக் காத்துப் பட்டுஎல்லாம் செத்துக் கிடக்குதுகள்.இவக விஷத்துக்கு அவ்வளவு பவர் " என்றார்

பின் இடத்தை விட்டு வெளியேறி வீ ட்டைச் சுற்றிசிதறிக்கிடந்த செங்கல் நான்கைக் கையில் எடுத்துக்கொண்டு பொந்தின் வாய் இருந்த திசைக்குப் பின்னால்நின்று கொண்டார்.பின் கையில் துணியைச்
சுற்றிக் கொண்டு மெதுவாகக் குனிந்து முதல்செங்கல்லை பொந்தில் வாயில் அடைத்துமிக வேகமாக அடுத்து அடுத்து மூன்றுசெங்கல்லையும்அந்த பொந்திலேயே திணித்தார்.

பின் மண் வெட்டிஎடுத்துவரச் சொல்லி சுற்றி இருக்கிறமண்ணை வெட்டி அந்த இடத்தை மேடாக்கிவிட்டுவந்து வாசல் திண்ணையில் அமர்ந்தார்
அவர் தைரியமாகத் தன்னைக் காட்டிக் கொணடாலும்கண்களில் மிரட்சியும் உடல் நடுக்கமும் லேசாகத் தெரியத்தான் செய்தது

பின் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லிகுடித்துவிட்டு " ஊரையே மிரட்டுகிற இவகளுக்குபொந்து தோண்டவும் தெரியாது.பொந்தை அடைச்சா
வெளியே வரவும் தெரியாது " என்றார்

Friday, November 27, 2015

கரு நாகத்தின் பலவீனம் -3

ஒரு வழியாக பாம்பை அடிக்கக்கூடாது எனவும்பாம்பாட்டியை அழைத்து பிடித்துப் போவது எனமுடிவு செய்தவுடன் உடன் அதற்கான
தகவலகளைவிசாரிக்கத் துவங்கினேன்

இப்போது என்றால் பாம்பு பிடிப்பவரின் செல் நம்பர்கூட டைரக்டரியிலேயே கிடைக்கிறது.முன்பெல்லாம்அப்படி இல்லை.அவர்களைத் தேடி அவர்கள் இருக்கும்கிராமத்திற்குத்தான் போகவேண்டும்

அதன்படி எனது நிர்வாகக் கட்டுப்பாட்டில்இருந்த ஒரு கிராமத்தில் பாம்பு பிடிக்கிறவர்கள்அதிகம் இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டு அங்கு போய்
விசாரிக்கத் துவங்கினேன்.

அங்கு போய் விசாரிக்கையில்தான் பாம்பு பிடித்துஅதன் தோலை உரித்து விற்று அதைஒரு தொழிலாக செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம்
அதிகாரிகள் அடிக்கடி வந்து பாம்பு பிடிக்கத்தடை உள்ளதாகச் சொல்லி ரெய்ட் வந்துபாம்புத் தோலை பறிமுதல் செய்து போவதோடு
அல்லாமல் கேஸும் பதிவு செய்வதால்வெறுப்படைந்து  போய் பாம்பு பிடிக்கும் தொழிலையேவிட்டு விட்டு சித்தாள் வேலைக்கும்
 நிமிந்தாள் வேலைக்கும் போய்க்கொண்டிருப்பதாகச்சொன்னார்கள்

பின் அந்த கிராமத் தலைவரிடம் என் நிலைமையைச்சொல்லி எப்படியாவது  கொஞ்சம் தெளிவானஒருவரை மட்டும்எனக்காக அனுப்பிவைக்கும்படிகேட்டுக் கொள்ளஅவர் உடன் ஊருக்குள்
தகவல் சொல்லி ஒரு பெரியவரை அழைத்துவந்துஎன் முன் நிறுத்தினார்

அவர் முழுக் கதையையும் கேட்டுவிட்டு "இதற்குப் போயா இத்தனை தூரம் வந்தீர்கள்இப்படிச் செய்தால் போதுமே .அந்தக் கரு நாகம்அத்தோடு மண்ணாகிப் போகுமே " எனநான் செய்ய வேண்டியதைச் சொல்ல
 எனக்கே ப்.பூ.. கரு நாகத்தின் பலம்அவ்வளவுதானாஎனப் பட்டது

பாக்கியராஜ் அவர்கள் டார்லிங் டார்லிங் படத்தில்இறுதிக் காட்சியில் மனம் வெறுத்துப் போய்தற்கொலை செய்து கொள்வதற்காக மலை உச்சிக்கு
விரைந்து கொண்டிருப்பார்..அவர் காதலிஅவரைத் தடுத்து நிறுத்த தொடர்ந்துகத்திக் கொண்டே வர இவர் அதனைக் கண்டு
கொள்ளாது மலை உச்சிக்கே வந்து நின்றுகுதிக்கப் போகிற பாவனையில்
முகத்தில் ஒரு உணர்ச்சிக் குவியலைக் காட்டுவார்

அதில் அந்த மலையின் அதல பாதாளமேஅவர் முகத்தில் பிரதிபலிப்பதாகத் தெரியும்நாமும் அதிர்ந்து போய் இருக்கையின் நுனிக்கே
வந்து விடுவோம்.அடுத்த காட்சியில்மலைச் சரிவுக்கு பதிலாக அவருக்கு முன்னே அகலமான அழகான தார்ச் சாலையும் அதில்
காரும் பஸ்ஸும் போய்க்கொண்டிருக்கும்

நம்மையும் அறியாது நாமும் அவரின் காதலியோடுசிரிக்கத் துவங்கிவிடுவோம்

அந்தப் பெரியவர் அந்த கரு நாகத்தைக்கொல்வதற்குச் சொன்னவழியைக் கேட்டதும்எனக்குள் ஏனோ இந்தக் காட்சிதான்உடன் நினைவுக்கு வந்துபோனது

(தொடரும் )

Tuesday, November 24, 2015

கரு நாகத்தின் பலவீனம் -2

நானும் வெலவெலத்துப் போனேன்

சினிமாவில் பார்ப்பது என்பது வேறு,பாம்பாட்டியின்அருகில்பாதுகாப்புடன் இருந்து பார்ப்பது என்பது வேறுஅல்லதுஅவசர கதியில் எங்காவது
போய்க்கொண்டிருக்கும்போது பார்ப்பது என்பது வேறு.

ஆனாலஇப்படி வீட்டு வாசலில்முழுவீட்டையும் ஆக்கிரமித்து மிரட்டுகிற மாதிரிபடமெடுத்துப் பார்க்க ஏற்பட்ட பாதிப்பில் இருந்து
என்னால் வெகு நேரம் மீளவே முடியவில்லை

வாசல் விளக்கைப் போட்டபடி அதனுடையைநகர்வை தெரிந்து கொள்வோம் என நானும்அரை மணி நேரத்திற்கு மேலாக வாசல் வராண்டாவில்
அமர்ந்திருக்க அதுவும் அதற்குரிய இடத்தில்இருப்பதானதோரணையில்
 அலட்சியமாக அமர்ந்திருந்தது

 எங்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புஎன்பதைவிட எங்கள் வீடு தேடி இப்போது யாரும்வந்துவிடக் கூடாதே என்கிற பயமே அதிகம் இருந்தது
அதனால் மாடிக்கு என் மனைவியை அனுப்பிஎங்கள் வீட்டுக்கு அடுத்திருந்த திருப்பத்தில் யார்வந்தாலும் எச்சரிக்கை செய்யும்படி அனுப்பிவைத்தேன்

நல்லவேளை யாரும் வரவில்லை.நாகமும் பின்சர்வ சாதாரண்மாக இறங்கி வழக்கம்போல் செல்லும்பொந்தின் பக்கம் நகரத் துவங்கியது.

என்னால் இரவுமுழுவதும் தூங்க் முடியவில்லை

நானும் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதால்பாம்பு குறித்து எனக்குஅதீத பயம் கிடையாதுஆயினும் எதிர்பாராது அதன் அருகில் யாரும்
வர நேர்ந்தால தன்னை தற்காத்துக் கொள்ளும்நோக்கில்நிச்சயம் தீண்டிவிடும் என்பதில்எனக்கு எவ்வித சந்தேகமும்    இல்லை.

மனிதர்கள் இயல்பாகப் புழங்குகிறபகுதியில்எப்போது எது நேரம் என உறுதி சொல்ல முடியாதுஎன்பதால் நிச்சயம் இதற்கு ஒருமுடிவுசெய்யவேண்டும்என முடிவெடுத்து இரவுஎப்போதோ என்னை அறியாதுஉறங்கிபோனேன்

மறு நாள் எழுந்து முதல் வேலையாக அக்கம் பக்கம்வீட்டில் உள்ளவர்களிடம் இதுவிவரம் தெரிவித்துஎன்ன செய்யலாம் இப்படியே தொடர்வதில் உள்ள
ஆபத்தை விளக்கி அதனை அடித்துக் கொல்லலாம் எனமுடிவு செய்தோம்

ஆயினும் அதிலும் இரண்டு சிக்கல் இருந்தது

என் வீட்டிலும் அடுத்திருந்த வீட்டில்இருந்த பெண்களும்நாகத்தை அடித்துக் கொல்வதுபாவம் என்றும்அதற்கு உறுதியாய்சம்மதிக்கமாட்டோம் என்றும் யாராவதுபாம்பாட்டியை அழைத்துவந்துபிடித்துப் போகத்தான்
செய்யவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்

இரண்டாவது அதனுடைய ஆகிருதியைநேரடியாகப்பார்த்தவர்கள் நிச்சயம் அதனை  அடிக்கத் தயங்கத்தான் செய்வார்கள்.
மேலும் அதுமிகச்சுதாரிப்பாக காம்பௌண்ட் சுவரை ஒட்டியே
மிகக் கவனமாகச்செல்வதால் மிகச் சரியாகஒரு அடியில்கவனித்து அடித்தால் ஒழியஅதனை அடித்துக்கொல்வது என்பது நிச்சயம்
 சாத்தியமில்லை.

ஒருவேளை அடிக்க முயன்றுதவறிப்போனால் அதற்கும் நமக்கும் உள்ள
சுமுக உறவில்ஏற்படுத்தும் பாதிப்பை தாங்கிக்கொள்கிற தைரியம் எங்களில் எவருக்கும் இல்லை.

என்வே முடிவாக எங்கள் நகருக்குஅருகில் உள்ளகிராமத்திற்குச் சென்று பாம்பு பிடிக்கிறவரை அழைத்துவந்து பிடித்துக் கொண்டுபோகச் சொல்வது என ஏக மனதாக முடிவெடுத்தோம்

அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை

(தொடரும் )

Monday, November 23, 2015

கரு நாகத்தின் பலவீனம்

அப்போது நாங்கள் ஒரு வாய்க்காலைஒட்டிய வீட்டில் குடியிருந்தோம்
வாய்க்காலை ஒட்டிய வீட்டில் இருந்தால்என்ன என்ன பிரச்சனைகள் இருக்குமோஅத்தனை பிரச்சனைகளும் எங்களுக்கு இருந்தது

மழைக் காலங்களில் அதிகமானக் கொசுக்கடிவிதம் விதமான பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் நீரில் மூழ்கிய மேடு பள்ளச் சாலைகள்
சுகாதாரக் கேடு விளைவிக்கும் சாக்கடைகலந்த குடி நீர்இவையெல்லாம் கூட எங்களுக்கு ஒருமாதிரிபழகிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையில்

 ஒரு நாள்....

நாங்கள் வளர்த்து வந்த அல்சேஷன் நாய் ஒருவித்தியாசமான குரலில் குரைக்க   ஆரம்பித்ததுநாங்கள் அவசரமாய் ஓடிப் போய்ப் பார்க்க
இருட்டில் ஒன்றும் புரியவில்லை. சரி ஒன்றுமில்லைஏதாவது புதியதாக வேறு பகுதி நாய் வந்திருக்கும்அதனால்தான் இப்படி வித்தியாசமாகக்
 குரைக்கிறது  என எங்களை நாங்களேசமாதானம் செய்து கொண்டு படுத்துவிட்டோம்

மறு நாள்

பகல் பொழுதில் நாய் மீண்டும்அதே மாதிரிக் குரைக்க  அவசரம் அவசரமாய்
வாசல் கதவைத் திறந்து பார்க்க அதிர்ந்து போனோம்.ஒரு ஆறடிக்குக் குறையாத கன்னங்கரேலெனஒரு பெரிய பாம்பு வீட்டு மதிலோரம்
அலட்சியமாக ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது

அதனுடைய உடல் மினுமினுப்பு பருமன் நிறம்எங்களுக்குள் ஒரு கிலியை ஏற்படுத்திப் போகஎன்ன செய்வது என அறியாமல்
திகைத்துப் போய் நின்றோம்

அது எங்களை யாரையும் ஒரு பொருட்டாகக்கருதாதுஅதன் போக்கில் மெதுவாகக்காம்பௌண்டைக் கடந்து வீட்டை அடுத்திருந்த
புதருக்குள் மறைந்து போனது

அடுத்து உடனடி நடவடிக்கையாககாம்பௌண்டுச்சுவருக்கு அருகில் இருந்த
 செடி கொடிகளையெல்லாம்சுத்தம் செய்து அடுத்த வீட்டுக் காரர் சொன்ன
ஐடியாவின்படி மஞ்சள் கரைத்துத் தெளித்துஅருகில் இருந்தகோவிலுக்குப் போய்நாக கன்னிகளுகளுக்கு பால் அபிஷேகம்செய்து இனி பாம்புப் பிரச்சனை இருக்காது எனநாங்கள் எங்களை  தைரியப் படுத்துக் கொள்ள
 முயற்சித்துக் கொண்டிருந்தோம்

ஆனால் எங்களுடைய இத்தனை பிரயத்தனங்களும்அந்தப் பாம்பிடம் எந்தவித பாதிப்பினையும்ஏற்படுத்தவில்லை

மாறாக ஒரு நாளைக்கு ஒருமுறை போய்வந்ததுஇரண்டுமுறை
போய் வர ஆரம்பித்தது.

எங்கள் வீட்டு நாய் கூட முதலில்பயந்து ஒரு மாதிரியான குரலில் குரைத்தது
இப்போது ஒரு சிறு தகவல் தெரிவிப்பது போலவித்தியாசமான குரலில்குரைக்க மட்டும் செய்தது

அதன் குரலில் பழைய பதட்டமோ பயமோ இல்லை

நாங்கள் கூட இரயில் தண்டவாளத்தின்அருகில் வசிப்பவர்கள் ரயில் சப்தத்தை வைத்துஇத்தனை மணிக்கு இந்த ரயில் போகும் என
அந்த சப்தத்தோடு தங்களைச் சம்பத்தப்படுத்திக்கொள்வதைப் போல நாங்களும் நாயின்குரலை வைத்து பாம்பு கிராஸ் செய்து
கொண்டு உள்ளது எனத் தெரிந்து கொண்டுபயமோ பதட்டமோ இல்லாமல்
எங்களுடைய வேலைகளை நாங்கள் கவனிக்கப பழகிவிட்டோம்

இந்த்ச் சூழலில் ஒரு நாள் மாலை மிக லேசாகஇருள்பரவத் துவங்கிய சமயத்தில்வாசல் பக்கம் போனஎனது பெண் திடுமேனகத்தியபடி ஓடி வந்து என் மடியில்முகம் புதைத்துசப்தமாக பயந்து அலற ஆரம்பித்தாள்
உட்ல் தெப்பமாய் வேர்த்துக் கொட்டஉடல் நடுங்கிக் கொண்டிருந்தது

நானும் பயந்து போய் அவளை கீழேபடுக்கவைத்துவிட்டுவாசல் பக்கம் வந்து பார்க்க வாசல் கேட் கதவின் மேல்முழுவுடலையும்கிடத்திப படமெடு த்தபடி

அந்தக் கரு நாகம்
சாவகாசமாக காற்று வாங்கிக் கொண்டிருந்தது          
                                                                   

 (தொடரும் )

Wednesday, November 11, 2015

உறவுகள்

என்பதின் துவக்கம் அப்போது நான்  உசிலம்பட்டியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்.இன்றைக்கும் அனறைக்கும் காலக்கணக்கில்
முப்பது ஆண்டுகள்தான் இடைவெளி என்றாலும் கூட
உண்மையில் இன்றைய உசிலம்பட்டிக்கு அனறைய
உசிலம்பட்டிக்கும் அனைத்து நிலைகளிலும்
ஒரு நூற்றாண்டு வித்தியாசம் இருக்கும்

தாலுகாவாக உசிலம்பட்டியை தரம் உயர்த்திஇருந்தார்களே ஒழிய ஊழியர்கள் அங்கு தங்கிவேலை பார்ப்பதற்குரிய எந்த ஒரு வசதி வாய்ப்பும்
இருக்காது.வீடுகள் வாடகைக்கு இருக்காதுஇருந்தாலும் கழிப்பறை வசதி இருக்காதுநல்ல ஹோட்டலகள் இருக்காது.

உயர் அதிகாரிகள்யாரும் ஆய்வுக்கு வந்தால் கூட மதியம் திரும்பி
மதுரைக்கோஅல்லதுதேனிக்கோசாப்பாட்டுக்குசென்றுவிடுவார்கள்,
மொத்தத்தில் அரசு பணியாளகளைப்பொருத்தமட்டில் அனைத்து துறைகளிலும் அதைஒரு தண்டணை ஏரியாவாகத்தான் வைத்திருந்தார்கள்

எனவே அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும்பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருக்காதுஎன்பதாலும் மாறுதல் என்பது முயன்றுபெற்றால்தானே ஒழியஅவர்களாகமாற்றமாட்டார்கள்என்பதாலும்கொஞ்சம்
தெனாவெட்டாகத்தான்வேலை பார்ப்பார்கள்

அலுவகப் பணி நேரம்குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டர்கள்
.
அவர்களுக்கெல்லாம் ஏதுவாக வித்தியாசமாக
அந்த புகைவண்டியும் இருந்தது

மதுரையில் இருந்து போடிக்குச் செல்லும்படியாகமதுரை நிலையத்தில் காலை ஒன்பது மணிக்குஒரு புகைவண்டி கிளம்பும்.அந்த வழித்தடத்தில்
அது ஒன்றுதான்பயணிகள் வண்டி.

அது பல்கலைக் கழக மாணவர்கள் வசதிக்காகஅவர்கள் நேரத்திற்கு ஏற்றார்ப்போல புறப்படும்அதில் சென்றால உசிலம்பட்டி பணிக்கு செல்பவர்களுக்குகொஞ்சம் தாமதமாகத்தான் போகும்

ரயில் நிலையத்தில் இறங்கி அலுவலகம் வயல்வெளியில்நடந்துபோய்ச் சேர எப்படியும் தினமும் ஒருமணி நேரம்தாமதமாகத்தான் ஆகும் என்றாலும் அந்த ஊர் மக்களும்அதிகாரிகளும் அதற்கு அனுசரித்து இருக்க
பழகிக் கொண்டார்கள்.

அதைப் போல மாலையிலும்ஐந்து மணிக்கு அலுவலக்ம் முடியும் என்றாலும்
நாலு மணிக்கு அதே புகைவண்டி  வந்து விடும் என்பதாலும்
எல்லோரும் மூன்று நாற்பதிற்கே  அலுவலக்ம் விட்டுபுறப்பட்டுவிடுவார்கள்.இது அங்கு பழகிப் போன  ஒன்று

எல்லோரும் புகைவண்டிக்கு பாஸ் என்பதாலும்தினமும்செல்பவர்கள் என்பதாலும் மாணவர்களும் சரிஅலுவலகப்பணியாளர்களும் சரி.தினமுமே
ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான்ஏறிக் கொள்வார்கள்.மாறி ஏறமாட்டார்கள்

கல்லூரி மாணவர்கள் வண்டியில் பாட்டும் கூத்தும்தூள் பறக்கும் என்றால் ஊழியர்கள் பெட்டியில்செட்டு செட்டாகசீட்டுக் கச்சேரி நடக்கும்.
ஒன்பது மணிக்கு ஏறி சீட்டில் அமர்ந்தால்உசிலம்பட்டி வரும் வரையில்
வேறு எதிலும் கவனம் போகாது

இப்படிஒருநாள்புகைவண்டிகிளம்பிக்கொண்டிருக்கையில்
எதிர்பாராதவிதமாகஎங்கள் பெட்டியில்  மாணவர்கள் கூட்டம்
கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.எங்களுக்கு காரணம் தெரியவில்லை
பல்கலைகழகம்வரும்வரையில்நாங்களும்கண்டுகொள்ளவில்லை

பல்கலைக் கழகத்தில்கூட்டம் இறங்கியதும் எனக்கு எதிரில் இருந்த
நண்பர் சீட்டு விளையாட்டில் அதிகம்கவனம் செலுத்தாமல்முன்புறம் ஒரே பார்வையாகப்பார்ப்பதுவும் அடிக்கடி சீட்டைக் கவிழ்த்துவிட்டு
எதையோ வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தார்அப்படி என்னதான் இருக்கிறது என நான் முழுவதுமாகத் திரும்பிப் பார்க்கையில்
அங்கே ஒரு இளம் வயது பெண் இருந்தாள்

முதல் பார்வையிலேயே அவள் அப்படிப்பட்ட பெண்தான் எனத் தெரிந்த போதும் வயதும் முக  லட்சணமும்எதோ ஒரு தவிர்க்க முடியாத சூழலில்
அப்படிஆகிஇருக்கக்கூடும்என்கிறஎண்ணத்தைபார்ப்பவர்களுக்கு
தோன்றும்படியாகத்தான்அவள்  இருந்தாள்

எங்கள் பெட்டியில் அதிகமான மாணவர்கள் இருந்ததுஏன் எனவும்எனது எதிர்  இருக்கை நண்பர் ஏன் அடிக்கடிஅந்தப் பார்வை பார்த்தார் என்பதும் எனக்குஇப்போதுதான் புரிந்தது நாங்கள் தொடர்ந்துஆடத்துவங்க
எதிர் சீட்டு நண்பரோ எழுந்து போய்அந்தப் பெண் அருகிலேயே மிக நெருக்கமாகஅமர்ந்து கொண்டுகொஞ்சம் சில்மிசம்செய்யத் துவங்கிவிட்டார். எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது

சீட் ஆட்டத்தின் இடையில் பொழுதுபோகஅனைவரும்பல்வேறு விஷயங்களைப் பற்றிகாரசாரமாக விவாதித்து வருவோம்
சமூக அவலங்களும்  அரசியல்வாதிகளின்அசிங்கமானபக்கங்கள் குறித்தெல்லாம் மிக ஆழமாக ஆராய்ந்து பேசுவோம்

இவையெல்லாம் குறித்து அந்த எதிர் சீட் நண்பர்எல்லோரையும் விட மிக தெளிவாகவும்ஆணித்தரமாகவும்உணர்வு பூர்வமாகவும் பேசுவார்.
நாங்கள் எல்லாம் அவர்பேச்சில் உள்ளதார்மீகக் கோபம் குறித்து  அவர் இல்லாத போது பெருமையாகப் பேசிக் கொள்வோம்.
இப்போது அவரது செய்கைஎன்னுள் என்னவோ செய்தது.
சந்தர்ப்பம்கிடைக்காத வரையில்தான் நல்லவர்கள் என்றால்
அது எந்த வகையில் சேர்த்தி ?

நான்சடாரென எழுந்து அந்தப் பெண் அருகில் போனேன்
அவள் முகத் தளர்ச்சி நிச்சயம் சாப்பிட்டு இருக்கமாட்டாள்
எனத் தோன்றியது

அவள் பெயரைக் கேட்டுவிட்டு "சாப்பிட்டாயா " என்றேன்

"இல்லையண்ணே நேற்று பகலில் சாப்பிட்டது " என்றாள்
"எங்கே போகிறாய் " என்றேன்

" போடி " என்றாள்

உடனடியாக என் இருக்கைக்கு வந்து என் பையில் இருந்தமூன்று அடுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலைஅவளிடம் கொடுத்து
"இன்னும்  இன்னும் இருபது நிமிடத்தில்உசிலம்பட்டி வந்து விடும் நாங்கள் இறங்கிவிடுவோம்அதற்குள் சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை
கழுவிக் கொடுத்துவிடு"எனச் சொல்லிக் கொடுத்தேன்.

அவள் பசியின் காரணமோ என்னவோசம்பிரதாயத்துக் கூட மறுக்கவில்லை.எனக்கும்  சாப்பிடக்கொடுத்ததின் மூலம் நண்பனின் சில்மிஷ சேஷ்டைகளைசெயய முடியாமல் போகச் செய்யவும் பசியில் இருந்த ஒருபெண்ணுக்கு உதவிய திருப்தியும் கிடைக்க இருக்கையில்
வந்து அமர்ந்து விட்டேன்.நண்பனும் எரிச்சலுடன் என்எதிரிலேயே வந்து விட்டான் .அந்தப் பெண்ணும்அவதி அவதியாகச் சாப்பிட்டுவிட்டு  நாங்கள்
இறங்குவதற்குமுன்பாகவே  டிபன் பாக்ஸைமிக நன்றாகக் கழுவியும் கொடுத்துவிட்டுஎங்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்

நாங்கள் இறங்க்கும் வரை ஏதோ பெரிய உதவியைச்
செய்தது போலநிறையத் தடவை நன்றி சொன்னாள்.

நாங்கள் இறங்கி நடக்கத் துவஙகஎல்லோருக்கும் ஜன்னலோரம் உட்கார்ந்து நாங்கள்மறைகிறவரை கைகாட்டிக் கொண்டே இருந்தாள்
அதற்குப் பின் நான் அவளை என்றும் நினைத்ததும் இல்லை
எங்கும் பார்த்ததும் இல்லை

ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நாள்அரசு ஆஸ்பத்திரியில் எனது உறவினர் ஒருவர்உடல் நலமில்லாமல்சேர்த்திருக்க அவரைப் பார்த்து
 நலம் விசாரித்துவிட்டுஊருக்குச் செல்வதற்காகபஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கையில்ஒரு கைக் குழந்தையுடன் யாரோ ஒரு பெண் என்னை
முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது
எனக்கு உண்மையில் யாரெனத் தெரியவில்லை

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணே என்னருகில் வந்து "என்னைத் தெரிகிறதா " என்றாள்

உண்மையில் அதுவரை எனக்குத் தெரியவில்லை
பின் அவளே "உசிலம்பட்டி ட்ரெய்னில் ஒரு நாள்
சாப்பாடு கொடுத்தீர்களே ஞாபகம் இருக்கா அண்ணே " என்றாள்

அவளா இவள் என எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது
ஒரு நல்ல  ந்டுத்தரகுடும்பத்தைச் சேர்ந்த பெண் போலவே
 முற்றாக  மாறி இருந்தாள் .குழந்தையும் மிக அழகாக இருந்தது

பின் அவளே தொடர்ந்து பேசினாள்
"அன்னைக்கு அப்புறம் போடி போய் கொஞ்ச நாளிலேகேஸிலே மாட்டி கோர்ட்டுக்கு வந்தேன்அப்போஇவங்க அப்பாவும் ஏதோ செய்யாத குத்தத்திலேபிடிபட்டு கோர்ட்டுக்கு வந்திருந்தாங்க
இரண்டு  மூன்று முறை ஒரே நாளில் வாய்தா வந்தது
அடிக்கடி பாக்கிறது நாள இரண்டு பேரும் மனசு விட்டுபேசிக்கிட்டோம்.அப்புறம் அவர்தான் ஒரு நாள்
நாம இரண்டு பேரும் சேர்ந்து இருப்போமான்னு கேட்டாங்க
எனக்கும் ஒரு ஆதரவு வேண்டி இருந்ததுநானும்  சரின்னுசொன்னேன்.

வீரபாண்டி கோவிலிலேஇந்தத் தாலியைக் கட்டினாங்க.இப்ப சின்னமனூரில்
ரோட்டோரம் ஒரு டீக்கடை போட்டு நல்லா இருக்கோம்
வந்தா அவசியம் வாங்க "என்றாள்

அவள்சொல்வதைகேட்கக்கேட்கஎனக்குமிகுந்தசந்தோஷமாக இருந்தது.
ஆனாலும் நம்மிடம் ஏன்இவ்வளவையும் மன்ம் திறந்து கொட்டுகிறாள் என
ஆச்சரியமாகவும் இருந்தது

பின் அவளே கண்களில் லேசாகக் கசிய்த் துவங்கியநீரைத் துடைத்தபடி "எனக்கென்னவோ என்னைக்காவதுஉங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னுதோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப
சந்தோஷப் படுவீங்கன்னு தோணிச்சு இரண்டு மூணூதடவை
ட்ரெயினுக்கு கூட வந்து பாத்தேன் " என்றாள்

எனக்கும் மனதில் லேசாக நீர் கசியத் துவங்கியது

ஒரு நாள் அன்புடன் கொடுத்த சாப்பாட்டைத் தவிரநானேதும் அவளுக்கு செய்தததில்லை.அது அவளுள்இத்தனை பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறதென்றால்அவள் அரவணைப்பு இன்றி  அது நாள்வரை
எப்படி அவதிப்படிருப்பாள் என  எண்ண எண்ண
என் கண்களும் லேசாக கலங்கத் துவங்கின

பேச்சை மாற்றும் நோக்கில் "பையனுக்கு என்ன பெயர் "என்றேன்

"அவங்க தாத்தா பேர்தான் வைத்திருக்கிறோம்.விருமாண்டி "என்றாள்

"சரி விருமாண்டிக்கு பிஸ்கெட் எதுவும் வாங்கிக் கொடு "என
கையில் கிடைத்த ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்

வெகு நேரம் வாங்க மறுத்து பின் வாங்கி கொண்டாள்
பின் தன் பையனின் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்து
"சாருக்கு வணக்கம் சொல்லு " என்றாள்

"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்

என்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை
இழுத்துச் சொருகிக் கொண்டு பையனை என் காலடியில் போட்டு
அவளும் தரையில் வீழ்ந்து கும்பிட ஆரம்பித்துவிட்டாள்

நான் விக்கித்துப் போனேன்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கூட்டம் எங்களை
ஒருமாதிரி பார்க்கத் துவங்கியது

அவர்கள் கண்களில்  மட்டும்  ஏனோ இவர்கள்
என்ன உறவாயிருக்கும்
என்கிற கேள்வி ஆறாய்ப் பெருகிக்கொண்டிருந்தது